சென்னை தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டதாகக் கூறி சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த குழந்தையின் வலது கை அழுகியதால், அந்தக் கை அகற்றப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாக தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே பெற்றோரின் குற்றச்சாட்டின் காரணமாகக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் குழந்தைக்குத் தவறான சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வைத்து குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் இன்று காலை உயிரிழந்தது.