மொத்தம், 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி மாநில சட்டப்பேரவை. இதில், மூன்று உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். இன்று காலை வரை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அந்த மாநிலத்தில் ஆட்சி செய்துவந்தது. இன்று காலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது. ஏற்கனவே அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான் ஆகிய நான்கு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த சூழ்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.