
தேனி மாவட்டம் ராஜா களம் என்ற பகுதியில் உள்ள 40 சென்ட் நிலத்தைக் கடந்த 1991ஆம் ஆண்டு மூக்கன் என்பவருக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்யக் கூடாது எனவும், அதன் பிறகும் அந்த நிலத்தைப் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த விதியினை மீறி, இந்த நிலத்தைப் பட்டியல் வகுப்பைச் சாராத ஹரி சங்கர் என்பவருக்குக் கடந்த 2008ஆம் ஆண்டு மூக்கன் விற்றதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் இந்த பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாங்கியுள்ளார். அரசின் நிபந்தனையை மீறி வாங்கி அதனை அவரது பெயருக்குப் பட்டா மாறுதலும் செய்துள்ளார். இதனை எதிர்த்தும், விதியை மீறி பத்திரப்பதிவு செய்துகொடுத்த பதிவுத்துறை அதிகாரிகள், பட்டா மற்றிக்கொடுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், “ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பஞ்சமி நிலத்தை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது. முறைகேடாக நிலத்தை மாற்றிக்கொடுத்த வட்டாட்சியர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு ஆணையம் உத்தரவிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.