கடந்த ஆண்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி என்பவர், காவல்நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். இதனால் கர்ப்பம் அடைந்து அவரது நெருக்கடியால் கர்ப்பத்தை கலைத்துள்ளேன். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, இப்போது என்னை ஏமாற்றிவிட்டார்" என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீஸார் கைதுசெய்தனர். இதன்பின்னர், அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை நடிகை சாந்தினி திரும்பப் பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று காலை, ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டுக்கு வந்திருந்த சாந்தினி, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டு வாசலில் நின்று கொண்டு சாந்தினி கத்தி கூச்சலிட்டதால் வீட்டில் இருந்தவர்கள் கடுப்பாகியுள்ளனர். வெளியே வந்த அவர்கள், மணிகண்டன் இங்கே இல்லை எனவும், இங்கிருந்து வெளியே செல்லுமாறும் கூறியுள்ளனர்.
இதன்பின்னர் நடிகை சாந்தினி நிருபர்களிடம் கூறியதாவது, "சில மாதங்களுக்கு நடந்த பேச்சுவார்த்தையில், மணிகண்டன் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வழக்கை வாபஸ் பெற்றேன். ஆனால், மணிகண்டன் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தலைமைறைவாகிவிட்டார். அதனால்தான், அவரை தேடி சொந்த ஊருக்கு வந்தேன். ஆனால், அவரது ஆதரவாளர்கள் என்னை தாக்கிவிட்டனர்" என்றார்.பின்னர், அங்கிருந்து காரில் கிளம்பி சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.