தற்போதைய கரோனா தொற்று கால ஊரடங்கில் நாடே வீட்டிற்குள் முடங்கிப் போயிருக்கிறது. வேலை இல்லை. நேரப் போக்கிற்காக இளந்தாரிகள் தேவையின்றி வெளியே ஊர் சுற்றி மாட்டிக் கொண்டு தண்டத் தொகையும் கட்டி வருகின்றனர். ஆனால் கிராமங்களின் நிலைமை அப்படி இல்லை. காட்டிற்குள் வேட்டையாடவும் ஆடு புலி ஆட்டம் நடத்தவும் கிளம்பி விடுகிறார்கள். பலர் டிக்டாக் மோகத்தில் கிடப்பதையும் அது தொடர்பான வெரைட்டியான டிக்டாக் வீடியோக்கள் புற்றீசல் போலப் பெருகி வருவதும் அதிகரித்துள்ளது. அதில் சில, விபரீதத்திலும் முடிவதுண்டு.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகிலுள்ள மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், மாரிசாமி, ஆனந்த்ராஜ், ஆனந்தகுமார், உள்ளிட்ட நான்கு வாலிபர்களுக்கும் யோசனை வித்தியாசமாகவே உதித்திருக்கிறது. இவர்களின் ஒருவர் 12- ஆம் வகுப்பு மாணவன். இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் கிராமத்தின் பாறை பகுதியில் உள்ள பூம்பாறை ஏரியாவில், இரண்டு நாட்களுக்கு முன்னர் வீர தீரச் செயல் ஒன்றை நடத்தப் போவதாக, சிறுத்தை வேட்டைக்குச் செல்வதாக டிக்டாக்கில் ஒரு போலி செய்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த விஷயம் அருகிலுள்ள கோவில்பட்டி வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வரவே அவர்களைப் ஃபாலோ செய்திருக்கிறார்கள். இந்த நான்கு பேர்களும் மைப்பாறைக் குகையிலிருக்கிற சிறுத்தையை வெளியே வரவழைக்கும் வகையில் உள்ளே நெருப்பு வைத்திருக்கிறார்கள். அந்த நெருப்பு சீறிக் கொண்டு வெளியே வருகிற அளவுக்கு ஸீன் செட்டப் செய்தவர்கள் சிறுத்தை வெளியே வந்தால் அதை அடித்து வீழ்த்த நான்கு பேர்களும் தடியுடன் வீராப்பாக நிற்பது போன்று நடித்து வீடியோ எடுத்தவர்கள், அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளனர்.
இந்த 4 பேரையும் வளைத்துப் பிடித்த கோவில்பட்டி வனத்துறை அதிகாரிகள், விசாரணைக்காக புளியங்குடி வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலின், வனவர் அசோக்குமார், வனக்காப்பாளர்கள் முத்துராமலிங்கம், கோபிநாத் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தியதில், நான்கு பேரும் வனப் பகுதியில் வேட்டையாட முயற்சி செய்ததையும், டிக்டாக்கில், வேட்டையாடச் செல்வதாக பொய்யான செய்தி வெளியிட்டதையும் ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து நெல்லை மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி நான்கு பேர்களுக்கும் தலா 30 ஆயிரம் வீதம் மொத்தம் 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்று போலி செய்திகளை டிக்டாக்கில் வெளியிட்டால் வனத்துறைச் சட்டப்படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும் என்கிறார் வன அலுவலர் ஸ்டாலின்.
டிக் டாக் போலி ஹீரோக்களுக்கு ஆப்பு அடித்திருக்கிறது வனத்துறை.