







நேற்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சுவரில் துளையிடப்பட்டு இரு கொள்ளையர்கள் உள்ளே சென்று நகைகளை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்கள் தான் எனவும், இன்னும் இரண்டே தினங்களில் அந்த கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இரு திருடர்கள் முகமூடி அணிந்திருந்தனர். அதில் ஒருவன் நகைக்கடை தரைத்தளத்தில் சோகேஸில் இருந்த நகைகளை எடுத்து பேக்கில் போடுவதும், சிறிது நேரம் கழித்து நுழையும் மற்றொருவன் நகைகளை எடுத்து பேக்கில் போடும் காட்சி வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த சம்பவத்தில் திருடர்கள் இரண்டு பேக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.
திருச்சி தனிப்படை போலீசார் ஏற்கனவே புதுக்கோட்டையில் விடுதியில் தங்கியிருந்த வட மாநில கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.