![Three aressted by theni police got shocking information in investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/HslJ_R4fvLt5mtjgQjxojlAzmcyCw83d-EHV0yHicyw/1691218567/sites/default/files/inline-images/th_4563.jpg)
தேனி மாவட்டம் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் உத்தமபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, உத்தமபாளையம், பழைய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு, நெடு நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த காவல்துறையினர் கார் அருகில் சென்றனர். அப்போது அந்தக் காருக்குள் 3 மூன்று பேர் இருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது அந்த காருக்குள் 3 சூட்கேஸ்கள் இருந்தன. அதில் ஒரு சூட்கேஸை காவல்துறையினர் திறந்து பார்த்த போது, அதில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு ப்ளாஸ்டிக் பைகளில் இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், காரில் இருந்த மூவரையும் உத்தமபாளையம் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் வந்த கார், அதில் இருந்த 2 சூட்கேஸ் பெட்டிகள் உள்பட உடல் உறுப்புகள் அடங்கிய பெட்டிகளையும் அங்கு எடுத்து சென்றனர். அங்கு சென்ற காவல்துறையினர், மற்ற 2 சூட்கேஸ் பெட்டிகளையும் திறந்து சோதனை செய்தனர். அதில் ஒரு பெட்டியில் துணிகளும், மற்றொரு பெட்டியில் எலுமிச்சை, கற்பூரம், முட்டை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
அதன்பிறகு அந்த காரில் வந்த 3 பேரையும் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் காவல்துறையினருக்கு தெரியவந்தன. அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், காரில் பிடிபட்ட நபர்கள் மதுரை மாவட்டம் அய்யனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (39), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த டேவிட் பிரதாப் சிங் (40), கமுதியை அடுத்த பசும்பொன் பகுதியைச் சேர்ந்த முருகன் (65) என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, இவர்களுக்கும் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் (52) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் மாந்திரீகம் செய்பவர் என்று கூறப்படுகிறது. இவர், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரிடமும் நள்ளிரவில் மாந்திரீக பூஜை செய்தால் பணம் பல மடங்காகக் கொட்டும். ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பிய 3 பேரும் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு என்ன பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.அதற்கு ஜேம்ஸ், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் தனக்குத் தெரிந்த நபர் ஒருவர் இருப்பதாக கூறியுள்ளார். அவரிடம் நேரில் சென்று ரூ.5 லட்சம் பணத்தைக் கொடுக்க வேண்டும். அப்போது அந்த நபர் 3 சூட்கேஸ் பெட்டிகளை தருவார். அந்த பெட்டிகளை வாங்கிய பின் அதனை திறந்து பார்க்காமல் கொண்டுவர வேண்டும் . பின்னர் அந்தப் பெட்டிகளை வைத்து பூஜை செய்தால் உங்களுக்கு பணம் பலமடங்காக பெருகும் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து ஜேம்ஸ் கூறியபடி, அலெக்ஸ் பாண்டியன், பிரதாப் சிங், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் காரில் கேரளா, வண்டிப்பெரியார் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றதும் ஜேம்ஸ் கூறிய நபரிடம் தாங்கள் வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். அதற்கு அந்த நபர் அவர்களிடம் 3 சூட்கேஸ் பெட்டிகளை கொடுத்துள்ளார். அந்த பெட்டிகளை வாங்கிய அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரும் காரில் உத்தமபாளையம் நோக்கி புறப்பட்டனர். நேற்று முன் தினம் 3 பேரும் உத்தமபாளையத்துக்கு காரில் வந்தடைந்தனர். அப்போது அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நின்று, ஜேம்ஸை செல்போன் மூலம் அழைத்துள்ளனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும் அந்தப் பெட்டிகளை காவல்துறையினர் சோதனை செய்யும் வரை அதில் என்ன இருந்தது என்பது தங்களுக்கு தெரியாது என்று பிடிபட்ட 3 பேரும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த பெட்டியில் இருந்த உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புகளா? அல்லது விலங்குகளின் உடல் உறுப்புகளா என்பதைக் கண்டறிய மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அந்த உடல் உறுப்புகள் மனித உறுப்புகளாக இருந்தால் நரபலி கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய தலைமறைவான ஜேம்ஸையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறையிடம் விசாரித்தபோது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள உறுப்புகள் விலங்கின் உறுப்புகளா அல்லது மனித உறுப்புகளா எனக் கண்டறிய மதுரை தடயவியல் ஆய்வுக் கூடத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அந்த சோதனையில், அவை மனித உறுப்புகள் எனத் தெரியவந்தால், அது ஆணினுடையதா அல்லது பெண் உறுப்புகளா என அடுத்து கண்டறிவோம். அதன் பிறகு வண்டிப்பெரியாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட உறுப்புகளும், காணாமல் போனவர்களின் மருத்துவ சான்றுகளையும் வைத்து ஆய்வு செய்து அந்தக் கோணத்தில் விசாரணை நடத்தப்படும். அதுமட்டுமின்றி பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொள்வோம் என்றனர்.