திருவாரூரில் தேசிய புலனாய்வு முகமையை கண்டித்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய புலனாய்வு முகமையை உடனடியாக கலைக்க வேண்டும் , என்.ஐ.ஏ மசோதாவை உடனடியாக திருப்பி பெற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு காவல்துறை அனுமதியை மறுத்துவிட்டது, இருந்த போதிலும் தடைகளை மீறி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக திரண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, முஸ்லிம் சமுதாயத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறையினர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.