Skip to main content

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

Published on 25/03/2025 | Edited on 25/03/2025

 

Edappadi Palaniswami meets Union Minister Amit Shah
கோப்புப்படம்

தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து வெளியான தகவலில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாகக் கூறப்பட்டது. அதேநேரம் தற்பொழுது அதிமுகவில் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், திரைமறைவில் இந்த சந்திப்பு நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே  எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து  அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமா என்ற கேள்விக்கு ‘பாஜக கிஜக என எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி குறித்த தகவல்கள் இன்னும் ஆறு மாத காலத்திற்குப் பின்னர் தெரியவரும். நாங்களே செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணி குறித்து தெரிவிப்போம்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதே சமயம் அண்மையில் நடைபெற்ற ஜக்கியின் சிவராத்திரி விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதே நிகழ்வில் கலந்து கொண்ட எஸ்.பி. வேலுமணி நெருக்கம் காட்டிய பின்னரே மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கள் எழுந்தது.

இந்நிலையில் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சருடன் சந்தித்துப் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், எம்.பி.க்களும் உடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 
News Hub