Skip to main content

ஶ்ரீ ராமாயணக் கதைச் சுவடிகளைப் பராமரிக்கும் பணி தொடக்கம்!

Published on 24/03/2025 | Edited on 24/03/2025

 

  work of preserving the ‘Sri Ramayana’ stories has begun

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள 43,762 திருக்கோயில்கள் மற்றும் மடங்களில் இருக்கின்ற அரிய ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து பராமரித்து, பாதுகாத்து நூலாக்கம் செய்ய சுவடித் திட்டப் பணி குழுவினரை நியமித்துள்ளது. இத்திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளராக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறையின் முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுவடித் திட்டப் பணிக்குழுவினர் இதுவரை 1771 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து 53 கோயில்களில் சுவடிகள் இருப்பு குறித்துக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் சுருணை ஓலை ஆவணங்கள் சுமார் 1,78,000 ம், இலக்கியச் சுவடி கட்டுகள் 390, செப்புப் பட்டயங்கள் 95 ம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட சுவடிகளில் 50,028 ஏடுகள் முறையாகப் பராமரித்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட அரியச் சுவடிகளைப் படியெடுத்து அரிய 5 நூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அருள்மிகு ஞான பிரசூனாம்பிகா சமேத காளகத்தீசுவரர் திருக்கோயிலில் திருப்பணியின் போது இராஜகோபுரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 5 சுவடிகள் இருப்பினை திருப்பத்தூர் சரக ஆய்வாளர் சௌ.நரசிம்மமூர்த்தி இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்துக்கு தெரிவித்தார். இதனை அறிந்த இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுவடிகளை உடனடியாகப் பராமரித்து பாதுகாக்கும் படி ஆணையிட்டார்.  சுவடித் திட்டப் பணியின் பொறுப்பாளர் இணை ஆணையர் சி.ஹரிப்பிரிய சுவடித் திட்டப் பணி குழுவினரை உடனடியாகத் திருக்கோயிலுக்கு அனுப்பி வைத்தார்.

  work of preserving the ‘Sri Ramayana’ stories has begun

சுவடிகளை ஆய்வு செய்த சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது:  திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அருள்மிகு ஞான பிரசூனாம்பிகா சமேத காளகத்தீசுவரர் திருக்கோயில் உள்ள சுவடிகளை இணையாணையர்  அவர்களின் உத்தரவின்படி 21-03-2025 அன்று ஆய்வு செய்தோம். வேலூர் மண்டல இணை ஆணையர் தி.அனிதா, உதவி ஆணையர் சு.சங்கர் ஆகியோர் சுவடிக் குழுவிற்கு வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்து தந்தனர். சுவடிகளை ஆய்வு செய்த பொழுது 5 சுவடிக் கட்டுகளில் 2,075 ஏடுகள் அமைந்து காணப்பட்டன.

சுவடிகளில் வரும் குறிப்பு மற்றும் எழுத்தமைதி அடிப்படையில் கோயிலில் உள்ள சுவடிகள் எழுதப்பட்டது. 125 ஆண்டுகளுக்கு முன்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கோயிலில் உள்ள சுவடிகள் வழிச் சுவடி மரபைச் சார்ந்தவை ஆகும். கோயிலில் உள்ள சுவடிகள் கிருஷ்ணக் கவுண்டர், பள்ளிக் கொடுத்தான் என்கிற கோவிந்த கவுண்டனும் சேர்ந்து எழுதி வைத்த சுவடிகளைப் பார்த்து புதுச்சேரி சுப்புராய தம்பிரான் மகன் ஆறுமுகம் உபாத்தியாயர் சுவடிகளைப் படி எடுத்ததாக அறிய முடிகிறது.

எனவே, மூலச்சுவடி எழுதப்பட்ட காலம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று அறியமுடிகிறது. கோயிலில் உள்ள சுவடிகள் வால்மீகி ராமாயணத்தை அடியொற்றி வசன நடையில் எழுதப்பட்ட 'ஶ்ரீ ராமாயணக் கதை'ச்  சுவடிகள் ஆகும். ஒரு சுவடியில் சுருக்கமாக ஶ்ரீராமயணக் கதை எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஏனைய நான்கு சுவடிகளில் ‘ஶ்ரீராமாயணக் கதை’ விரிவாக வசன நடையில் எழுதப்பட்டுள்ளது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆகியவை மட்டும் அமைந்து காணப்படுகின்றன. இவற்றில், சில ஏடுகள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுவடிகள் சிதிலமடைந்து காணப்பட்டதால் அவற்றைப் பராமரித்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனுமதி பெற்று சுவடிகள் நூலாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்