Skip to main content

“இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்” - மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Published on 21/03/2025 | Edited on 21/03/2025

 

Union Minister Amit Shah speech Hindi is a friend of all Indian languages

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி (10.03.2025) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் இன்று (21.03.2025) பேசுகையில், “மொழியின் பெயரால் நாட்டைப் பிரிப்பவர்கள் தங்கள் திட்டத்தைப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நரேந்திர மோடி அரசு, அலுவல் மொழித் துறையின் கீழ், இந்திய மொழிகள் பிரிவை அமைத்துள்ளது, இது அனைத்து இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி, பெங்காலி, அனைத்து மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காகச் செயல்படும்.

டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, நாட்டின் குடிமக்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்களின் சொந்த மொழியில் கடிதப் போக்குவரத்து நடத்துவேன். தங்கள் ஊழலை மறைக்க மொழியின் பெயரால் கடைகளை நடத்துபவர்களுக்கு இது ஒரு வலுவான பதில். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?. தெற்கத்திய மொழிகளை நாம் எதிர்க்கிறோம் என்று?. இது எப்படிச் சாத்தியமாகும்?. நான் குஜராத்தைச் சேர்ந்தவன், நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதை எப்படி எதிர்க்க முடியும்?. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நாங்கள் மொழிகளுக்காக உழைத்துள்ளோம். தமிழ்நாடு அரசுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உங்களுக்குத் தைரியம் இல்லை என்று நாங்கள் இரண்டு வருடங்களாகக் கூறி வருகிறோம்.

நீங்கள் இதைச் செய்ய முடியாது. (தமிழ்நாட்டில்) ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும். அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் வழங்குவோம். மொழியின் பெயரால் விஷத்தைப் பரப்புபவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொழிகளை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் உங்களுக்கு இந்தியாவின் மொழி பிடிக்காது. வேறு எந்த இந்திய மொழியுடனும் இந்திக்குப் போட்டி இல்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். அனைத்து இந்திய மொழிகளும் இந்தியிலிருந்து வலுப்பெறுகின்றன. மேலும் இந்தி அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் வலுப்பெறுகிறது” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்