Skip to main content

முழு அடைப்புப் போராட்டத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார்களே? ஸ்டாலின் பேட்டி

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
police


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் , உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசையும், மத்திய அரசுக்கு அடிபணிந்து கபட நாடகம் நடத்தி வரும் ‘குதிரை பேர’ அதிமுக அரசையும் கண்டித்து, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் இன்று (05-04-2018) சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், காவல்துறையினரின் தடுப்பை மீறி வாலாஜா சாலையில், கையில் கறுப்பு கொடியேந்தி பேரணியாக வந்த மு.க.ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள உழவர் உழைப்பாளர் சிலை அருகில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து,  மு.க.ஸ்டாலினை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று பெரம்பூரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

 

ஸ்டாலின்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை தந்த பிறகும், மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அரசு காலம் கடத்தி வருகிறது. அதற்கு ஜால்ரா போடக்கூடிய, அடிமையாக இருக்கக்கூடிய அரசாக தமிழகத்தில் நடந்து வரும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி இருக்கிறது. இதை கண்டிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

அதன்படி, தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதென முடிவெடுத்து, இதுவரையில் தமிழகத்தில் இப்படியொரு முழு அடைப்புப் போராட்டம் நடந்திருக்குமா என்று கேட்கும் வகையில், இன்றைக்கு மிகப்பெரிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று, நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் தோழர்கள், வணிகர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லா அமைப்புகளுக்கும், அனைத்து கட்சிகளின் சார்பில் எனது நன்றியை மிகுந்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று, இதுவரை எங்களுக்கு வந்திருக்கின்ற கணக்கின்படி, ஏறத்தாழ 10 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, ஆங்காங்கு இருக்கின்ற மண்டபங்களில், பொது இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இன்று மாலை நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு இருந்த அனைத்து கட்சி கூட்டம், மாற்றப்பட்டு, நாளை காலை பத்தறை மணியளவில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மானத்தின்படி, அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில், டெல்டா பகுதியான திருச்சி முக்கொம்பில் இருந்து தொடங்கி, கடலூரில் முடிவடையும் வகையில், காவிரி உரிமை மீட்புப் பயணம் நடைபெறவிருக்கிறது. நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், எந்தெந்த தலைவர்கள், எங்கெங்கு பங்கேற்பது, சிறப்பான வகையில் நடத்துவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.

 

செய்தியாளர்: முழு அடைப்புப் போராட்டத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கிறார்களே?

ஸ்டாலின்: பொதுமக்களுக்கு எந்தவிதமாக சிரமும் ஏற்படாது. காரணம், இது அவர்களின் உணவு பிரச்சினைக்கான போராட்டம். தண்ணீர் இருந்தால் தான் விவசாயம் நடைபெற்று உணவு, குடிநீர் பிரச்சினைகள் தீர முடியும் என்பதால் பொதுமக்களே முன்வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, இது கட்சி சார்பான போராட்டமல்ல. எங்களுடைய போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பினரும் ஆதரவளித்து, எங்களோடு இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்தப் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருக்கிறது. ஆனால், ஒரு சிலர், குறிப்பாக சில ஊடகங்கள் ஆங்காங்கே கலவரம் நடைபெற்றது போல வேண்டுமென்றே ஒரு வதந்தியை திட்டமிட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. இந்தப் போராட்டம் அமைதியாக, அறவழியில் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.

 

செய்தியாளர்: இதன் பிறகாவது மத்திய அரசு தமிழகத்தின் குரலுக்கு செவி சாய்க்குமா?

ஸ்டாலின்: இதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாங்கள் அனைவரும் பேசி முடிவெடுப்போம்.

 

செய்தியாளர்: காவிரி விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என்று சொல்லி தமிழக அரசு மவுனமாக இருக்கிறதே?

ஸ்டாலின்: தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேர அரசும் எதுவும் செய்யப்போவதில்லை. மத்திய பாஜக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. அதனால் தான் மீண்டும் சொல்கிறோம், இதே மத்திய அரசு Clarification கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. உடனடியாக மத்திய அரசு அந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு, வரும் 9 ஆம் தேதியன்று மாநில அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும். இதையெல்லாம் வலியுறுத்தியே நாங்கள் பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

 

செய்தியாளர்: தமிழக நிலவரம் குறித்து ஆளுநர் திருப்தி தெரிவித்து இருப்பதாக முதல்வர் தெரிவித்து இருக்கிறாரே?

ஸ்டாலின்:  ஆளுநர்  ஒருவார காலத்துக்கு முன்பாக என்னை அழைத்து, இந்த ஆட்சியில் நடக்கும் அலங்கோலங்களை எல்லாம் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சியின் மீது ஆளுநர்  என்ன Opinion வைத்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான், ஆளுநர் தனி வழியில் (Track) சென்று, ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி மீது திருப்தி ஏற்பட்டிருந்தால் ஆய்வு நடத்த வேண்டிய அவசியமே அவருக்கு வந்திருக்காது. ஏற்கனவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உண்ணாவிரதம் என்ற பெயரில் கபட நாடகம் நடத்தியதுபோல, இப்போது ஆளுநர் அவர்களை சந்தித்துவிட்டு வந்து, மீண்டும் ஒரு நாடகம் நடத்துகிறார்கள்.

 

செய்தியாளர்: பிரதமர் தமிழகம் வரும்போது கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவீர்களா?

ஸ்டாலின்: ஏற்கனவே, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுத்த எல்லா தீர்மானங்களையும் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எனவே, நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், அதை எந்தவிதத்தில் செயல்படுத்துவது என விவாதித்து முடிவெடுப்போம்.

 

செய்தியாளர்: வரும் 9 ஆம் தேதி தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு நீதிமன்றத்தில் கிடைக்குமா?

ஸ்டாலின்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பை வழங்கிவிட்டது. அந்தத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. அதை அமைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தரும் யோக்கியதையும், அருகதையும் மாநிலத்தில் எடப்பாடி தலைமையில் நடக்கும் குதிரை பேர ஆட்சிக்கு இல்லை.

 

செய்தியாளர்: சில கட்சிகள் தனிப்பட்ட முறையில் போராடுகிறார்களே?

ஸ்டாலின்: அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, அவரவர் பாணியில் போராடுகிறார்கள். எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். ஏற்கனவே, இந்த அரசு வேறு வழியில்லாமல், நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தி இருந்தால், இப்போது நாங்கள் போராடும் அவசியம் ஏற்பட்டிருக்காது. அந்தத் தீர்மானங்களின்படி அரசு செயல்பட்டு, முடிவுகளை நிறைவேற்றி இருக்க வேண்டும். அதனால், எதிர் கட்சிகளான நாங்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

எடப்பாடி தலைமையிலான குதிரை பேர அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும்வரை எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடுவது நடக்காது. அவர்கள் எப்போது துணிச்சலாக வெளியில் வந்து, பதவி குறித்தும் ஆட்சி பற்றியும் கவலைப்படாமல் மத்திய அரசை கேள்வி கேட்கும் ஆற்றல் வந்தால், நீங்கள் கேட்டபடி எல்லா கட்சிகளும் இணைந்து போராடும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.