நவீன தொழில் நுட்பத்துடன் விவசாயத்தை வளர்க்க வேண்டுமென நாடே விவசாயத்தை ஊக்குவிக்கும் வேளையில், " இனிமேல் எதுக்கு விவசாயம்.?" என கேள்விக்கேட்டு மக்களை திணறடித்திருக்கின்றார் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் ச.ம.உ-வும், காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சருமான பாஸ்கரன்.
தமிழக பள்ளி கல்வித்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து அரசு பள்ளிகளில் மழலையருக்கான எல்.கே.ஜி., வகுப்புகளுக்கான புதிய திட்டத்தை அறிவித்து உள்ளபடியால், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகிலுள்ள வடக்கு தமறாக்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி.முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆங்கில வழி புதியக் கல்வித் திட்டத்தினை துவக்கி வைத்தார் அமைச்சர் பாஸ்கரன். குழந்தைகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அமைச்சர் சட்டென உணர்ச்சிவசப்பட்டு, " படிப்புதான் எல்லோருக்கும் முக்கியம். மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். யாராக இருந்தாலும் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்." என்றவர் தொடர்ந்து, " இங்கு மழையும் சரியாக பெய்வது இல்லை, தண்ணீரும் கிடைப்பதில்லை. விவசாயத்தை நம்பி இனி ஒருபயனும் இல்லை. ஆதலால் சிவகங்கை மக்கள் விவசாயம் செய்வதை விட்டுவிடுங்கள்," என்று உரையாற்றிவிட்டு செல்ல அந்தப் பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. நாடே விவசாயத்தை ஊக்குவிக்கும் வேளையில் இந்த பேச்சு இவருக்குத் தேவையா..? என்கின்றனர் விவசாயிகள்.