
கோவையில் பள்ளி ஆசிரியை தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் வழுக்குபாறை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பத்மா(56). கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம் போல வீட்டிலிருந்து ஸ்கூட்டி மூலம் பள்ளிக்குச் சென்ற பத்மா மாலை வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. பத்மாவை பல்வேறு இடங்களில் தேடிய அவரது வீட்டார் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர்.
அப்போது பத்மா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டி நாச்சிபாளையம் என்ற பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதேபோல் சம்பந்தப்பட்ட நாளன்று ஆசிரியை பத்மா பள்ளிக்கு செல்லவில்லை என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பள்ளியில் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகளிடம் பத்மா குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பத்மாவிற்கு எந்தவிதமான தொல்லைகளோ, மனவருத்தமோ இல்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து பத்மாவை பல இடங்களில் போலீசார் தேடிவந்த நிலையில் பத்மாவின் ஸ்கூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட அதே நாச்சிபாளையம் பகுதியில் குப்பை கிடங்கு பகுதியில் இருந்து எரிந்த நிலையில் கிடந்த சடலத்தின் கால் பகுதியை தெருநாய் ஒன்று குதறி இழுத்துக் கொண்டு வெளியே வந்தது. இந்த தகவல் போலீசாருக்கு கிடைக்க, அங்கு சென்ற போலீசார் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர். தெருநாயால் இழுத்து வரப்பட்ட அந்த சடலம் பத்மா உடைய சடலம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ஏற்கனவே அவருடைய ஸ்கூட்டர் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அவருடைய உடலும் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலைக்கான எந்த தடயங்களும் சிக்காததால் அந்த பகுதியை முழுவதும் சீலிட்டுள்ள போலீசார், தொடர்ந்து ஆதாரங்கள் கிடைக்குமா என தீவிரமாக தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த ஆசிரியை பத்மாவிற்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் பள்ளிக்குச் செல்வதாக கிளம்பிய பத்மா ஏன் நாச்சிபாளையத்திற்கு சென்றார்; யாரால் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக மர்மம் நீடிக்கும் நிலையில் தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.