கேரளாவில் திங்கள் கிழமை அதிகாலை காட்டுக்குள் நடத்திய தாக்குதலில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் மாணிக்கவாசகத்தை அடையாளம் காட்ட திருச்சி சிறையில் இருக்கும் அவரது மனைவி கலா மற்றும் அவரது அக்கா சந்திராவை பரோலில் அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கலும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொருவர் கார்த்திக் என்று கூறப்பட்டது. அந்த கார்த்திக் புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடி சாலையில் உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து- மீனா தம்பதிகளின் இளைய மகன் என்பது தெரிய வந்தது.
இது குறித்து கார்த்திக்கின் தாயார் மீனாவை அவரது வீட்டில் சந்தித்த போது.. நாங்கள் பெற்றோர் வைத்த பெயர் கண்ணன். ஆனால் இப்ப கார்த்திக் என்கிறார்கள். 10 வருசத்துக்கு முன்னால திருப்பூர்க்கு வேலைக்கு போறதா போனான். அப்பறம் அவனை மாவோயிஸ்ட்னு புடிச்சாங்க, அதுக்கு பிறகு ஒரிசா பக்கம் போயிட்டான். அப்பறம் தமிழ்நாட்டுக்குள்ள அவனை அனுமதிக்கல, அதனால் எங்கே இருக்கிறான். எப்படி இருக்கிறான் என்று எங்களுக்கு தெரியல. எந்த தொடர்பும் இல்லை.
இப்ப திங்கள் கிழமை அதிகாலையில் கேரளாவுல காட்டுக்குள்ள நடந்த சண்டையில சுட்டுக் கொன்னுட்டதா சொன்னாங்க. உடனே செவ்வாய் கிழமை அங்கே போனோம். உடல் போஸ்ட் மார்டம் கொண்டு போயாச்சுனு சொல்லி காத்திருக்க சொன்னாங்க. ஆனா அதுக்கு பிறகு என்னை பார்க்க விடாம திருப்பி அனுப்பிட்டாங்க. என் மூத்த மகன் முருகேசன் தான் அங்கேயே இருக்கிறான். அடையாளம் பார்க்க.
நாங்க காட்டுக்குள்ள போய் இருந்தப்ப விசாரிச்சோம். காட்டுக்குள்ள சமையல் செஞ்சுகிட்டு இருந்தப்ப திடீர்னு வெடிகுண்டை போட்டு 4 பேரும் மயக்கமடைந்து விழுந்த பிறகு தூக்கி வந்து சுட்டு கொன்னுட்டு துப்பாக்கி சண்டையில செத்துட்டதா சொல்றாங்கனு சொல்றாங்க. கடைசியில என் மகன் முகத்தை கூட எனக்கு காட்டலய்யா என்று கதறினார்.
இந்த நிலையில் கண்ணன் என்கிற கார்த்திக்கின் உடல் 4 ந் தேதி தான் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது, அதனால் கேரளாவுக்கு அடையாளம் காட்டச் சென்ற அவரது அண்ணன் முருகேசன் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.