
ஈரோடு மாவட்டம் பவானியில் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பட்டப்பகலில் மனைவி கண்முன்னேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த ஜான் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட 14 வழக்குகள் சேலம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இன்று காலை அவருடைய மனைவி சரண்யாவுடன் மாமனார் வீடு அமைந்துள்ள ஈரோடு மாவட்டம் பவானி பகுதிக்கு சென்றுள்ளார்.
அவருடைய மனைவி சரண்யா காரை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் இவர் இடதுபுறமாக அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென காரை ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் இவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். பவானி, சித்தோடு காவல்நிலைய எல்லைப் பகுதியில் உள்ள நசியனூர் பகுதியில் காரை வழிமறித்து ரவுடி ஜானை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
பின்னர் தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் சென்று யாருமில்லாத இடத்தில் காரை விட்டுவிட்டு இறங்கி தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையில் ஈடுபட்ட மூன்று பேரை சுட்டுப் பிடித்துள்ளனர். ரவுடி கொலை, போலீசார் துப்பாக்கி சூடு என தொடர் சம்பவங்களால் அரண்டு போயுள்ளது ஈரோடு பவானி வட்டாரங்கள்.