
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பிலாப் புஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் இராமநாதன். இவரது மகன் வீரபாண்டி (20). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்தார். தனது படிப்பு செலவிற்காக வீரபாண்டி விடுமுறை நாட்களில் சக நண்பர்களுடன் சேர்ந்து பலாப் பழம் பறிப்பது உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது படிப்பு செலவிற்கு பயன்படுத்தியுள்ளார். அதே போல இன்று கல்லூரி விடுமுறை என்பதால் ஒரு பலாப்பழ வியாபாரி குத்தகைக்கு வாங்கியுள்ள பலா மரங்களில் பழம் பறிக்கும் வேலைக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
மாங்காடு பூச்சிகடை பகுதியில் பலாத் தோப்பில் ஒரு பலா மரத்தில் வீரபாண்டி ஏறி பலாப் பழம் பறித்துக் கொண்டிருந்த போது மிதமான தூறல் விழுந்ததால் மரங்களுக்கு இடையே சென்ற மின்கம்பிகளில் மரக்கிளை உரசி மின்சாரம் தாக்கியதில் அலறல் சத்தத்துடன் மின்கம்பிகளில் சுருண்டு விழுந்துள்ளார். உடனே கீழே நின்றவர்கள் வீரபாண்டியை மீட்டு வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த போது வீரபாண்டி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தாய், சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் வீரபாண்டி உடலைக் கட்டிப்பிடித்து கதறியது அனைவரையும் கலங்க வைத்தது. உயிரிழந்த வீரபாண்டி உடலை பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வடகாடு போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், அங்கிருந்த உறவினர்கள் கூறும் போது, 'வடகாடு, மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம், குளமங்கலம், சேந்தன்குடி, கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு உள்ளிட்ட பல கிராமங்களிலும் உள்ள மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தங்கள் படிப்பு சுமையை பெற்றோர்கள் மேல் சுமத்தக்கூடாது என்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுமுறை நாட்களில் அந்தந்த கிராமங்களில் கிடைக்கும் விவசாயக் கூலி வேலைகளுக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை தங்களின் படிப்பு மற்றும் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கும் ஒரு சுமை குறைந்துவிடுகிறது. அதே போல பெண் குழந்தைகள் காலையில் பள்ளி செல்லும் முன்பு பூ தோட்டங்களில் சம்பளத்திற்கு பூ பறித்து கொடுத்துவிட்டு பள்ளி செல்கின்றனர்.
இப்படித்தான் பாலிடெக்னிக் படித்து வந்த வீரபாண்டியனும் சக நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் பருவத்திற்கு ஏற்ப பல வேலைகளை செய்து வந்தார். தற்போது பலாப்பழம் அறுவடை காலம் என்பதால் ஒரு வியாபாரியிடம் தினக்கூலிக்கு பலாப்பழம் பறிக்கச் சென்று இப்படி சிக்கிக் கொண்டார் என்றனர்.
பெற்றோர்களின் சுமையை குறைக்க தன் படிப்பு செலவுக்காக விடுமுறை நாளில் கூலி வேலைக்குச் சென்று மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் வீரபாண்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.