
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள பழமையானச் சுவடிகள், ஆவணங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து பராமரித்து பாதுகாக்கவும் நூலாக்கம் செய்யவும் சுவடித் திட்டப் பணிக்குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் தொடர்ந்து கள ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் இக்குழு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிடாம்பட்டி எனும் ஊரில் உள்ள அருள்மிகு சஞ்சீவிராயர் திருக்கோயிலில் கள ஆய்வு செய்த பொழுது கோயிலின் பரம்பரை அறங்காவலர் ச.ரங்கராஜன் அவர்களிடம் இருந்த செப்புப் பட்டயம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். இந்தச் செப்புப் பட்டயத்தை ஆய்வு செய்த சுவடித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது:

செப்புப் பட்டயத்தின் அமைப்பு:
பிடாம்பட்டி சஞ்சீவிராயர் திருக் கோயிலில் இருந்த செப்புப் பட்டயம் 32 செ.மீ. நீளமும் 22 செ.மீ. அகலமும் கொண்டது. இச்செப்புப் பட்டயத்தின் முன் பகுதியில் 48 அடிகளும் பின்பக்கத்தில் 36 அடிகளும் அமைந்து காணப்படுகின்றன. செப்புப்பட்டயத்தின் நடுவில் " ஶ்ரீராம ஜெயம்" என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
செப்புப் பட்டயத்தின் காலம்:
சஞ்சீவிராயர் திருக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட செப்புப் பட்டயம் கி.பி.1804 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 8 ஆம் தியதி எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்புப் பட்டயம் எழுதப்பட்டு 220 ஆண்டுகள் ஆகியுள்ளது அறிய முடிகிறது.
தானம் வழங்கிய மன்னர்:
ராச ராச வள நாட்டில் பண்டி சூழ் நாடு எனும் நிர்வாகப் பிரிவின் கீழ் தெற்குலூர் அமைந்திருந்துள்ளது. தெற்குலூரில் காணியுடைய அரசர் மக்களில் இந்திர குல வம்சத்தையும் காசிப கோத்திரத்தையும் சேர்ந்தவர் ஶ்ரீமது திருமலைராய தொண்டைமான். இவரின் மகன் திருமலையப்பராய தொண்டைமான். இவரின் மகன் ராச ஶ்ரீ ராச விசய ரெகுநாத ராய பாதாரத் தொண்டைமான். இவர், அருள்மிகு சஞ்சீவிராயர் சுவாமி கோயிலில் நித்தியப்படி, கட்டளைப் பூசை, கோயில் திருப்பணி, அபிஷேகம், நெய்வேத்தியம், அன்னதானம் முதலிய தர்மங்கள் முறையாக நடைபெற நிலக்கொடை வழங்கியுள்ளார். நில தானம் வழங்கப்பட்ட நிலம் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பிடாம்பட்டியில் அமைந்துள்ளது. சருவ மானியமாக வழங்கப்பட்ட இந்த நிலதானம் வெங்கட்டராய தாசரி என்பவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தான நிலத்தின் எல்லை விவரம்:
ராச ஶ்ரீ ராச விசய ரெகுநாத ராய பாதாரத் தொண்டைமான் அவர்கள் சஞ்சீவிராயர் சுவாமி திருக் கோயிலுக்குத் தானம் வழங்கிய நஞ்சை புஞ்சை நிலத்திற்கான எல்லை விவரம் வருமாறு:
கிழக்கு எல்லை:
ஈசானிய மூலையில் ராசிபுரம் ஈஸ்வரன் கோயில் கட்டுக்கரை கடை வயலுக்கு மேற்கு. இதன் தெற்கு, மேற்படி கட்டுக்கரை குளத்து வாயின் மேல்மூலையில் ராயப் புடையான் கட்டுக்கரையின் மேல் வரப்புக்கு வடக்கு மூலைக்கு மேற்கு. இதன் தெற்கு, அய்யானங்குட்டி புஞ்சையின் தெற்கு மூலைக்கு மேற்கு.
தெற்கு எல்லை:
சிங்கத்தாக் குறிச்சி எல்லைக்கு வடக்கு . பறையன் புஞ்சையின் தெற்கு பொளிக்கு வடக்கு . இதன் மேற்கு, வேம்படிப் புஞ்சையின் தெற்கு பொளிக்கு வடக்கு. இதன் வடக்கு, சிங்கத்தாக் குறிச்சி முரா நாயக்கன் புஞ்சையின் கீழ்ப் பொளிக்குக் கிழக்கு.
மேற்கு எல்லை:
சிங்கத்தா குறிச்சி பொரசு அடி புஞ்சையின் கீழ்ப் பொளிக்கு கிழக்கு. இதன் வடக்கு, பிடாம்பட்டி புதுக்குளத்தின் மேல் கலிங்குக்கு கிழக்கு. இதன் வடமேற்கு, திருமலைச் சமுத்திரம் எல்லைக்கு கிழக்கு. நல்ல பெருமாள் புஞ்சையின் மேல் பொளிக்கு கிழக்கு. இதன் வடக்கு, திருமலைச் சமுத்திரம் எல்லைக்கு கிழக்கு. குமாரமங்கலம் எல்லைக்கு தெற்கு.

வடகிழக்கு வடபாகு எல்லை:
கோயில் புஞ்சைக்கு வடக்குப் பொளிக்கு தெற்கு. இதன் கிழக்கு, மேற்படி புஞ்சையின் ஈசானிய மூலை. இதன் தெற்கு, பாலையடி புஞ்சையின் வடக்குப் பொளிக்கு தெற்கு. இதன் தென்கிழக்கு, குமாரமங்கலத்து எல்லைக்கு தெற்கு. முருகன் கட்டுக்கரை ஈசானிய மூலைக்கு மேற்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நான்கு எல்லைக்குட்பட்ட நிலத்தில் வீரர் அனுமார் முத்திரையிடப்பட்ட கல் பதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த முத்திரைக் கல்லுக்கு உள்பட்ட நஞ்சை, புஞ்சை, திட்டுத் திடல், நத்தம், படுகை, தோப்புத் துரவு, மாவடை, மரவடை, சொர்ணாதாயம், வகையறுப்பு, இடங்கை வலங்கை பல வகை கூலி, வரி ஆகியவையும் மேல் நோக்கிய கிணறும் மேல் நோக்கிய விருட்சமும், சிலை தரு பாஷாண நிதி நிட்சபம் ஆகியவையும் சருவ மானியமாக வழங்கி தாரை வார்த்து வெங்கிட்ட ராய தாசரி வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும் செப்புப் பட்டயம் தெரிவிக்கிறது. இந்தச் செப்புப் பட்டயத்தை பழனியப்ப வாத்தியார் மகன் வடமலை வாத்தியார் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது.
தானமும் பாதுகாப்பும்:
இந்தத் தானம் புல்லும் பூமியும், கல்லும் காவேரியும், சந்திரனும் சூரியனும் நிலைத்து இருக்கும் வரை பரம்பரை பரம்பரையாக வெங்கிட்ட ராய தாசரி வம்சாவழியினர் நடத்திக் கொண்டு சுகத்திலே இருக்கக்கடவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தர்மத்திற்கு வாக்குச் சகாயம், சரீரச் சகாயம், அர்த்தச் சகாயம் பண்ணினவர்கள் காசியிலே, கங்கைக் கரையிலே கோடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டைப் பண்ணின பலனைப் பெறுவர். இந்தத் தர்மத்துக்கு தீமை செய்தவர்கள் கங்கைக் கரையிலே கோடி காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்றும் செப்புப் பட்டயம் தெரிவிக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.