பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டதால் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நாளை அவசர கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பாக ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது காலை உணவிற்காக ஒப்பந்த ஊழியர் ஒருவர் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள தனியார் உணவகத்தில் காலை உணவு வாங்கி அலுவலகத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள் 3 பேருக்கு கொடுத்துள்ளார்.
அப்போது உணவை பிரித்து உண்ட போது சாம்பாருடன் இறந்த நிலையில் பல்லி ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து உணவருந்திய 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கருவுற்று இருந்த கவிதா என்ற பெண் ஊழியர் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக உடனிருந்தவர்கள் இரண்டு பேரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சம்பத்தில் பாதிப்படைந்தவர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு உண்டாகியுள்ளது.