சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அனைத்தையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையின் முக்கிய வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா தளங்கள் மட்டும் அல்லாமல் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், சென்னையின் பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் நிலையில், கரோனா பரவும் அச்சத்தையும், பார்கள் மூடப்பட்டுள்ளதையும் பொருட்படுத்தாமல் பலர் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி சாலை ஓரங்களில் நின்று குடிக்கின்றனர்.