சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் (30.08.2024) பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “தனது மகள் (10 வயது சிறுமி) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றம் செய்து விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும், தமிழ்நாடு காவல்துறையில் சிறப்புப் புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. அதில், அ.தி.மு.க வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிறுமியின் உறவினர், சதீஷ் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இருவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி ஆகிய இருவரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு வரும் 21ஆம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுதாகரை, அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை.யில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து 'யார் அந்த சார்?' என அதிமுக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறது. சட்டப்பேரவை நடைபெறும் வரும் நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்?' என கேள்வி எழுப்பும் வகையில் பேஜ் அணிந்து வந்தனர். இந்நிலையில் இன்று பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் இருக்கும் புகைப்படத்தை காட்டி 'இவன் அந்த சார்' என கோஷம் எழுப்பினர்.