நேற்று முன்தினம் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை நீலாங்கரை பகுதியிலுள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக இருக்கிறது. குதர்க்கவாதமாகவும் இருக்கிறது. அவர் பேசுகின்ற அரசியலுக்கே அதை எதிராக போய் முடியும். தேசிய அளவிலாக பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார் பேசுகின்ற மத வழி தேசியம் தான் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும். அதை விடுத்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிரமாக களப்பணி ஆற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய சமூக நீதியின் தேசிய அடையாளமாக இருக்கக்கூடிய தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
காட்டுமிராண்டி காலத்தில் இருந்து தமிழ் பேசப்படுகிறது என்று தொன்மையை பேசுவதற்காக பெரியார் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதுதான் சரியான பார்வை. தமிழ் காலத்திற்கேற்ப, நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும் வலுப்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர் சொன்னதை தவறாக திரித்துப் பேசுகிறார்கள். பெரியாருடைய தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் இது ஏற்புடையதல்ல''என்றார்.