ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதித்த தொழில் நிறுவனங்களைத் தவிர, மற்ற நிறுவனங்கள் மூடப்பட்ட நாட்களை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவீந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசிடம் ஏப்ரல் 8- ஆம் தேதி கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு ஏப்ரல் 23- ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி, சிறப்பு விடுமுறை என ஒரு நாள் மட்டுமே அறிவிக்க முடியும் என்றும், இதுபோன்ற ஊரடங்கு காலத்தில் தொடர்ச்சியாக நிறுவனங்கள் மூடப்படும் போது, சிறப்பு விடுமுறை அறிவிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு என்று இல்லாமல், ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் பொத்தாம்பொதுவான ஒரு உத்தரவை மனுதாரர் கோரியிருப்பதாக அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிரான இந்த வழக்கில், மத்திய அரசு, தென்னிந்தியத் தொழிலாளர் சம்மேளனம், கோவையில் உள்ள கொடிசியா தலைவர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்ததுடன், அனைவரும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை மே 28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில்,‘ஒரு கட்டத்தில் கரோனா தொற்று முழுமையாகக் குறைந்துவிடும் என்பதில் இந்த நீதிமன்றம் நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்தச் சமயத்தில், மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும் நிலை ஏற்பட்டு, அமைதியாகவும், முறையாகவும் திறம்படச் செயல்பட முடியும். உற்பத்தி துறையில், நாட்டில் உள்ள முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் தொழிற்சாலைகள் திறம்படவும், லாபகரமாகவும் இயங்கினால்தான் மத்திய. மாநில அரசுகளின் வருமானம் பெருகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு 2005- ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் உள்ள விதிகளை ஆராய்ந்து உரிய பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.