‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் பாலு, நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்தும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடர்ச்சியாக சில நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு வருஷமும் இந்த பிரச்சனையைக் கொண்டு வருகிறார். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் வேண்டுமென்றே தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டு வரிகளைத் தவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைப் புத்தகக் கண்காட்சியில் சில சில்லறைகள் சீரழித்து வரும் செயல்களைச் செய்கிறார்கள். இதற்கெல்லாம் ஆளுநர்தான் வழி ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார். உலகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களின் உணர்வோடு தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கிறது. அந்த பாடலை 1970ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் தேர்வு செய்து, ஒன்றிய அரசால் ஏற்கப்பட்டு வாழ்த்து பாடலாகக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்புதான் மற்ற மாநில அரசுகள் தங்களுக்கான பாடலை கொண்டு வந்தார்கள்.
ஆளுநர்.ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் செய்வதுபோல் கர்நாடகாவில் நடந்துகொண்டால் வெளியில் நடமாட முடியாது. தமிழ் நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தொடங்கி தேசிய கீதத்தில் முடியும் என்பது 3 மற்றும் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூட மனப்பாடமாகத் தெரியும். ஆனால், தான் மெத்தப் படித்த மேதாவி என்றும் சனாதன பாதுகாவலன் என சொல்லிக்கொண்டு திரியும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்வது என்பது தன்னுடைய பாதுகாப்பைப் பயன்படுத்திக்கொண்டு பத்திரமாகச் சிலருக்கு உதவிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எத்தனை முறை விளக்கம் சொன்னாலும் அவை உள்ளே வரும்போது, என்ன கலாட்டா செய்யலாம் முடிவோடுதான் வருகிறார். வந்து கலாட்டா செய்த பிறகு உடனே அதற்குத் தனது எக்ஸ் வலைதளத்தில் நான் அப்படிச் செய்யவில்லை இப்படிச் செய்யவில்லை என அமித்ஷாவிற்கும் மோடிக்கும் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? தான் செய்கிற சண்டித்தனத்திற்கு ஒப்புதல் எதிர்பார்க்கிறாரா? இல்லையென்றால் சொல்லிக்கொடுத்தை சரியாகச் செய்துவிட்டேன் எனத் தெரியப்படுத்துகிறாரா?
மாநில அரசால் அலுவல் மொழியாக இருக்கும் ஒரு மொழி தன்னுடைய மொழிப் பாடலை தேர்ந்தெடுத்த பின்னால் வேறு ஒரு அரசாங்கம் வந்து அதை மாற்றலாமே ஒழிய அதை மாற்றுவதற்கு யார் முயற்சி செய்தாலும் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தில் கை வைப்பது அவர்களின் நோக்கம் அல்ல, திராவிடம் என்று பயன்படுத்துவதுதான் அவர்களுக்கு உறுத்திக்கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் சில தற்குறிகளை வைத்து திராவிடம் என்றால் என்ன? என்ற முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள். தேசிய கீதம் எழுதிய நோபல் பரிசு பெற்ற உலகத்தின் ஒப்பற்ற இலக்கியவாதியான ரவீந்தர்நாத் தாகூரின் தாடி முடிக்குச் சம்பந்தமில்லாத சில சில்லறைகள் ‘திராவிட உத்கல வங்கா’ என்ற வரியில் இருக்கும் திராவிடத்தை எடுக்க வேண்டும் என்று சொன்னால் பிரிவென்பேன் ஆஃப் இன்சல்ட் நேஷனல் ஹானர் ஆக்ட் பிரிவு மூன்றின் படி மூன்று வருட சிறை தண்டனை உண்டு.
தேசிய கீதத்தில் இருக்கும் திராவிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டேன் அல்லது பாடுவதை நிறுத்துவேன் என்று சொன்னால் முதல் முறை இந்த தவறைச் செய்பவர்களுக்கு மூன்று வருடமும் மீண்டும் அந்த தவறைச் செய்தால் கூடுதலாக ஒரு வருட தண்டனை கொடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. திராவிடத்தை எதிர்ப்பவர்கள் போற்றும் சங்கராச்சாரிய ஆதிசங்கரர், தன்னை தென்பகுதியில் இருந்து வந்தவன் என்றும் தன்னைத்தானே ‘திராவிட சிசு’ என்றும் அழைத்துக்கொண்டதாக செளந்தர்ய லகரி சொல்லுகிறது. சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட செளந்தர்ய லகரியில் திராவிட சிசு என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்ட ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரையும் ‘திராவிட சிசு’ என்று சொன்னதாக இருக்கிறது. மூல மொழியில் இருந்த பிறந்த ‘கன்னடமும் களிதெலுங்கும்’ எனத் தமிழ்த் தாய் வாழ்த்திலேயே சுந்தரம் பிள்ளை குறிப்பிட்டார். மேலும் ‘ஒன்று பலவாகி’ எனவும் சொல்லியிருப்பார். அதில் அவர் ‘ஆரியம் போல் வழக்கொழிந்து’ என்று குறிப்பிட்டிருந்ததை, கலைஞர் வந்து பார்ப்பனர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்தில் அந்த வரிகளை எடுத்திருப்பார். இதைத் தெரிந்துகொள்ளாத தற்குறிகளும் தறுதலைகளும் பேசிக்கொண்டிருக்கும்போது ஆளுநர் அதற்கு வழிகொள்வது என்பது கேவலமான நடவடிக்கை.
தி.மு.க. மட்டுமில்லாது திராவிடம் என்ற சொல்லை கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டிருக்கும் அ.தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இந்த விஷயத்தில் வாய்மூடி மொளனமாக இருப்பது, அவர்களின் இயக்கத்திற்குச் செய்யும் துரோகமாக மட்டும் இருக்காமல் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு இது குறித்த அறிவு இல்லையென்றால் சிறுபான்மையில் இருந்து வருகின்ற ஜெயக்குமார் போன்றவருக்குத் தலைமை பொறுப்பைக் கொடுத்துவிட்டு மற்ற வேலையை பார்க்கட்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.-வை அடிமை கட்சியாக அறிவித்துவிட்டு கட்சியை அடமானம் வைத்துள்ளார். தொண்டர்களுடைய வற்புறுத்தலால்தான் பா.ஜ.க.வுடன் சேராமல் அ.தி.மு.க. தனி இயக்கமாக அடையாளம் காணப்படுகிறது. பா.ஜ.க. உடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று சொல்கிற பழனிசாமி தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்கு தி.மு.க. உடன் சேர்ந்து ஒரே குரலில் பேசியிருக்க வேண்டும். அப்படி பேசிவிட்டு அவர் எந்த அரசியல் வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளட்டும் தவறு கிடையாது என்றார்.