நேற்று முன்தினம் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை நீலாங்கரை பகுதியிலுள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக மற்றும் பெரியாரிய அமைப்புகள் பல இடங்களில் காவல்துறையில் சீமானின் பேச்சு குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திமுகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெரியார் குறித்த அறிவிலிகளின் அவதூறுகளால் அவருடைய புகழை மறைக்க முடியாது. தமிழ்நாட்டை ஏன் பெரியார் என்கிறோம் என சில மண்ணாந்தைகளுக்கு புரிவதில்லை. பெரியாரின் கொள்கைகளே தமிழ்நாட்டை இன்றும் வழி நடத்துவதால் பெரியார் மண் என்கின்றோம். யாருக்கோ ஏஜென்டாக சில தற்குறிகள் இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பெரியார் சொல்லாதவற்றை கூட அவர் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்புகின்றனர். பெரியாரை விமர்சிக்கும் இழிவான மலிவான அரசியல் பேர்வழிகளை புறக்கணிப்போம். தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என்று நினைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும். மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்'' என தெரிவித்துள்ளார்.