பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ''நிதிநிலை அறிக்கையில் குறிப்பாக கோவை பகுதிக்கு ஒரு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று நான் என்னுடைய முதல் உரையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல் மத்திய சிறைச்சாலை பகுதி அமைந்திருக்கின்ற இடத்திலே செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான ஒரு திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்த வருடம் 43 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணிகளும் விரைவாக துவங்கப்பட வேண்டும். வேகமாக வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் கோவை முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் வளர்ந்து வரக்கூடிய நகரத்திற்கு கனெக்டிவிட்டி என்று சொல்கின்ற இணைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது விமான நிலையம். கோவையில் இருக்கக்கூடிய சாலைகளை பற்றி பல்வேறு முறை பேரவையில் பதிவு செய்திருக்கிறேன்'' என்றார்.
அதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''கோவை மெட்ரோவை பொறுத்த வரை பலமுறை திட்டமிட்டு பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதனால் லோடு பிரச்சனையால் வழித்தடங்களை மாற்றியமைத்து அதற்குப் பிறகு பீசிபிலிட்டு டெஸ்ட் பண்ணப்பட்டு அதற்கு அனுமதி கொடுத்து தற்பொழுது டிபிஆர்-க்கு அனுப்பி இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் வந்துவிடும். விமான நிலையத்தை பொறுத்தவரை போன ஆண்டு நிதி எல்லாம் ஒதுக்கி கிட்டத்தட்ட 85 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து விட்டது. இன்னும் பாக்கி இருக்க வேலைகளை வேகமாக செய்ய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்டர்நேஷனல் டிக்லரேஷன் எங்கள் கையில் இல்லை. அது ஒன்றிய அரசிடம் இருக்கிறது. அதனால் நாங்கள் எங்களுடைய பணியை விரைவாக செய்கிறோம். அவர் உறுப்பினராக இருக்கக்கூடிய கட்சி தான் அங்கு டெல்லியில் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவங்க அமைச்சரிடம் கேட்க வேண்டும். எப்படி மதுரைக்கு நாங்கள் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் மதுரைக்கு கேட்டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
அப்போது எழுந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''இவர்கள் மதுரை-கோவை இரண்டு ஏர்போர்ட் பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். வேலூர் ஒன்று இருக்கிறது. அதை யாராவது கவனிச்சீங்களா? இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிஞ்சா நாங்களும் ஃபிளைட்ல போய் இறங்குவோம்'' என சொல்ல அவையிலிருந்த அனைவரும் சிரித்தனர்.