அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (13/07/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம்மையெல்லாம் ஆளாக்கிய எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் மாபெரும் ஆலவிருட்சமாய் வளர்க்கப்பட்ட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடி நரம்புகளான, ரத்தத்தின் ரத்தமான, ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்து வணங்குகிறேன்.
கட்சியின் பொன்விழா ஆண்டில் வீருநடைபோடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக, 11/07/2022 அன்று நடைபெற்ற கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
உங்களில் ஒருவனாக, கிளைக்கழக செயலாளர் பொறுப்பில் தொடங்கி, 48 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் என்னை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்குப் பின், இந்த மாபெரும் பேரியக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தும் படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.