கடந்த ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்ட நிலையில் கலவரம் தொடர்பான வழக்கும், மாணவி உயிரிழந்த வழக்கும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த இரு வழக்கின் விசாரணையும் முறையாக நடைபெற வேண்டும் என்று மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பிலிருந்து மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று கூறப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகக் கூறி போலீஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டு சீலிடப்பட்ட கவரில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்னும் 4 வாரங்களில் வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.