தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி," வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (03.01.2020) வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு உள்ளது. இரவு முழுவதும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதனால் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களை சுழற்சி முறையில் மாற்றப்படுவது பற்றி தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார். வாக்கு எண்ணிக்கையில் எந்தவித முறைகேடும் இல்லை. முறையாக நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் என்ற திமுகவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை". இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.