தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான எம்ஜிஆர் மூலம் அவர் உருவாக்கிய அதிமுக கட்சிக்குள் அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆரின் இறப்பிற்கு பிறகு கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்படி அவர் முதல்வராக இருந்த 1991 முதல் 96 வரையிலான ஐந்தாண்டு கால ஆட்சி காலத்தில் ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டதாக தமிழ்நாட்டின் ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சாமி அப்போது கவர்னராக இருந்த சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று 1996 ஆம் ஆண்டு சென்னை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவை விசாரித்த அன்றைய சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இதனை புலனாய்வு செய்ய ஆணையிட்டார். இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு ரூபாய் 66.65 கோடியாகும். 1996 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்ட பேரவை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்ததால், அதற்கு பிறகு வந்த திமுக அரசு இந்த வழக்கை அரசு தரப்பு வழக்காக மாற்றிக்கொண்டது. திமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீடு தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு துறையால் சோதனை செய்யப்பட்டது. அப்படி சோதனையிட்டதில் 800 கிலோ வெள்ளி பொருட்கள், 28 கிலோ தங்க ஆபரணங்கள், விதவிதமான வைர நகைகள், 750 ஜோடி காலணிகள், 10500 புடவைகள், 91 கை கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
தனி ஒருவரின் பயன்பாட்டுக்கு இவ்வளவு பொருட்களா என்று அப்போது அந்த பொருட்கள் பற்றிய செய்திகள் எல்லா முன்னணி செய்தி தாள்களிலும் தலைப்பு செய்தியாக வெளிவந்திருந்தது. அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதால் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை சரியாக நடைபெறாத நிலை ஏற்பட்டது. இதனால் இவ்வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி அப்போதைய தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சுப்ரமணியன் சாமியும் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்படி 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இந்த வழக்கு கர்நாடகா நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா, வழக்கு விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராததால், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கானது கர்நாடக நீதி மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்தது. அப்படி வழக்கு நடந்த காலங்களில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கர்நாடக நீதி மன்றம் பலமுறை கடுமையாக கண்டித்து வந்தது.
இப்படி பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதி மன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்றும், முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் நூறு கோடி அபராதம், மற்ற மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பளித்தார். சொத்து குவிப்பு வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப் பட்டபோது ஜெயலலிதா முதல்வராக இருந்ததால் அவருக்கு கிடைத்த நான்காண்டு கால சிறைத்தண்டனையின் காரணமாக அவர் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. கர்நாடக சிறப்பு நீதி மன்றம் தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து 2015 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி என்பவர் அரசு வழக்கறிஞர் ஜெயலலிதா மீதான குற்றங்களுக்கு சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி ஜெயலலிதாவை விடுதலை செய்தார். விடுதலை அளிக்கப்பட்ட அந்த தீர்ப்பில் குமாரசாமி கொடுத்த கணக்கு ஒன்று அப்போது குமாரசாமி கணக்கு என்று பலராலும் நகைச்சுவையாக பேசப்பட்டது. மேலும் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது செல்லாது என்று கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருக்கும்போதே கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்து விட அதற்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட வழக்கு தொடர்பான அனைவரும் குற்றவாளிகள் தான் என்றும் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தநிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்டப் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஆன செலவுக்கு ஈடாக கர்நாடக அரசு அந்த பணத்தை எடுத்து கொள்ளலாம் என்றும் நரசிம்ம மூர்த்தி தனது மனுவில் கருத்து தெரிவித்து இருந்தார். எனவே இவ்வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஏலம் விட வேண்டிய பொருட்களின் பட்டியலை அளிக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதாவின் தங்கம், வைரம், வெள்ளி, நவரத்தின கற்கள், முத்து, பவளம், புடவை, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலை அரசு வழக்கறிஞர் ஜாவலி என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆனால் புடவைகள் காலணிகள் கைக்கடிகாரங்கள் ஆகியவை ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்படாததால் அந்த மாதிரியான பொருட்களை ஏலம் விட அனுமதிக்க முடியாது என்றும், சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோரின் தற்போதைய வங்கிக்கணக்கில் உள்ள பண விபரங்களை வரும் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கர்நாடகா சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.