தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி (வயது 26). இவர் வழக்கம் போல் இன்று (20.11.2024) பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சின்னமணி என்ற கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் குத்தி கொலை செய்தார். மதன்குமார் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியை மீட்ட சக ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் ரமணி வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை ரமணியை மதன்குமார் ஒரு தலையாகக் காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்கு பெண் தர மறுத்ததால் ஆத்திரத்தில் மதன்குமார் இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்குத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையைத் துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நிலைமையை ஆராய அமைச்சர் அன்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் செல்லவுள்ளார்.