
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், அக்கரைப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (எ.ஜி.எ.எம்.டி.) 2023-24 ரூ.14.31லட்சம் மதிப்பில் சக்சான் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெ.திலகவதி தலைமை தாங்கினார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பாறைப்பட்டி ராமன், பிள்ளையார்நத்தம் முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் பாஸ்கரன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் மல்லையாபுரம் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி தட்சிணாமூர்த்தி வரவேற்றார். விழாவில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்துவிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதன்பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “நாம் தொடங்கியிருக்கும் திட்டமான மல்லையாபுரத்தில் சாய்தள சிமிண்ட் வாய்க்கால் அமைக்கும் பணி ஆத்தூர் ஒன்றியத்துடன் மட்டும் நின்றுவிடாது. அருகில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி வரை இந்த சிமிண்ட் வாய்க்கால் அமைக்கும் பணி மாநில அரசின் நிதியை பெற்றுத் தொடர்ந்து அமைத்துக் கொடுக்கப்படும். சிமிண்ட் வாய்க்கால் அமைத்து கொடுப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் மட்டுமின்றி ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் உபரிநீரும் பாதுகாப்புடன் அருகில் உள்ள குளங்களுக்கு செல்லும் நிலைமை உருவாகும் இன்று நாம் செய்யும் இந்தப் பணி வருங்காலத்தில் 50 வருடம் காலத்தில் நம் சந்ததியினர் நினைத்துப் பார்க்கும் அளவிற்கு அமையும். அதுபோல் அக்கரைப்பட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் காணொளி மூலம் கல்வி கற்கும் நிலைமை உருவாகி உள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் தான் அங்கன்வாடி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பாதுகாப்பான சுற்றுச்சூழலுடன் கல்வி கற்கும் நிலைமை உருவாகி உள்ளது. அதற்கு காரணம் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருவரே. குக்கிராமங்களுக்குக் கூட சிறப்பான சாலை வசதி, ரேசன் கடை வசதி, தெருவிளக்கு வசதி, தங்குதடையின்றி குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்திருப்பதால் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் எளிதாக அருகில் உள்ள நகரங்களுக்கு செல்லும் நிலைமை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் திராவிட மாடல் அரசு என்று கூறினார்.