கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் 1543 அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இந்த ஒன்றரை மாத கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் இன்று திறக்கப்படுவதால் ராகிங் அல்லது தேவையற்ற கொண்டாட்டங்களில் மாணவர்கள் ஈடுபடுவர் என முக்கிய கல்லூரி வளாகங்களின் முன் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். பச்சையப்பன், நந்தனம், மாநில கல்லூரி மற்றும் அதன் அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அதேபோல் பேருந்துகளில் ரகளை செய்து பாட்டுப்பாடும் ''ரூட்டு தல'' எனும் மாணவர்களை முன்னரே அறிந்து ஒருவாரத்திற்கு முன்பே அழைத்து போலீசார் எச்சரிகை விடுத்திருந்தனர். அதேபோல் இன்று கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களின் பைகளை சோதித்த பிறகே கல்லூரிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதையும் மீறி சில மாணவர்கள் பட்டாசு வெடிப்பது, தங்கள் துறையைப் பற்றி புகழ்ந்து கோஷமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
அதேபோல் இன்று காலை சென்ட்ரலில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் கல்லூரி மாணவர்கள் பையை சோதனையிட்டபொழுது பல மாணவர்களின் பையில் பட்டாக்கத்தி இருந்தது. இதை கண்டறிந்த போலீசார் பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அதேபோல் கல்லூரி முன்பு ரகளையில் ஈடுபட்டதாக 13 மாணவர்களை பிடித்து விசாரித்து கல்லூரி முதல்வர் முன் நிறுத்தி எச்சரித்து பின்னர் வகுப்பிற்கு அனுப்பிவைத்தனர்.