
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ஆம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே அமைச்சர் சிவசங்கர் போராட்டம் நடத்தியிருந்தார். இதனையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அமைச்சர் சிவசங்கர் மீது அரியலூர் போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். மேலும் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்ததாகவும் அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதி மீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான 3 வழக்குகளும் அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இதனையடுத்து இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி அமைச்சர் சிவசங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், சிவசங்கர் மீதான 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது விதிகளை மீறியதாக அமைச்சர் பெரிய கருப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.