“சார்.. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இடைதேர்தலாம்.. தேர்தல் ஆணையம் சொல்லுது..” என்றார் அந்த ஊர் நக்கீரன் வாசகர். மேலும் அவர், “இடைத்தேர்தல் லிஸ்ட்ல விளாத்திகுளத்தைக் காணோம்.” என்றார் பதற்றத்துடன். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அளித்திருக்கும் தவறான தகவலைத்தான் நம்மிடம் சுட்டிக்காட்டினார் அவர். ‘சரி.. என்னவென்று பார்க்கிறோம்..’ என்று அவரிடம் சொல்லிவிட்டு, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் பார்வையிட்டோம்.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், எந்தெந்த தொகுதிகளில் யார் யார் மனு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காகவும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான www.elections.tn.gov.in என்ற முகவரிக்குச் சென்றோம்.
அதில், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 18 தொகுதிகளின் பட்டியலில் விளாத்திகுளம் தொகுதி விடுபட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் பெயர் இடம் பெற்றிருந்தது. தேர்தல் ஆணையத்துக்கு ஏன் இந்தக் குழப்பம்? என்று நினைத்தவாறு மற்றொரு பக்கத்துக்குச் சென்றோம். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதைக் குறிப்பிடும் விதத்தில், ‘தகவல் இல்லை’ என்று காட்டியது. இன்னொரு பக்கத்திலோ, விளாத்திகுளம் தொகுதியின் பெயர் இடம்பெற்று, 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், இதிலும் குழப்பமும் குளறுபடியாக உள்ளது.