
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (17.03.2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ‘ஆட்சிக்கு வந்தால் மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநில அரசுகளை பழிவாங்க மாட்டேன்’ என 2014 ஏப்ரல் 18ஆம் தேதி சொன்னார். கடந்த 10 ஆண்டுகளில் மாற்று கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சியில் உள்ளனவோ, அங்கு அந்த ஆட்சியை மாற்றுவது, ஆட்சிக்கு நெருக்கடி அளிப்பது போன்ற செயல்களைத்தான் பாஜக அரசு செய்து வருகிறது. பழிவாங்கும் நடவடிக்கைக்கு அவர்கள் பயன்படுத்திவருவது அமலாக்கத்துறை. அதன் மூலமாகப் பலரையும் அச்சுறுத்தி, பாஜகவில் இணைத்து, அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிடுகிறார்கள். சேராதவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்துகொண்டு இருக்கிறார்கள்.
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த சுவேந்து அதிகாரி, அஸ்ஸாம் காங்கிரஸை சேர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, சிவசேனாவின் பாவனா கவாலி, பிரதாப் சர்நாயக் ஆகியோர்கள் மீதான சிபிஐ, அமலாக்கத் துறைகள் வழக்குகள், பாஜகவில் ஐக்கியமானவுடன் காணாமல் போய்விட்டன. எனவே அமலாக்கத்துறையை ஒரு அரசியல் கருவியாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டு. இன்று காலையிலே பாஜக கட்சி ஒரு ஊர்வலம் கேட்டு அனுமதி கிடைக்காததால், தமிழக பாஜக மாநில தலைவர், முதலமைச்சர் குறித்து தவறான குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கின்றார். முழுக்க முழுக்க இது சட்டவிரோதமான செயல்.
பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தால், சிபிஐ - அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து வைக்கிறோம் என்று பாஜக பேரம் பேசியதை ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சராக இருந்த மணி சிசோடியா அம்பலப்படுத்தினார். நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என்று அமலாக்கத்துறைக் கேட்டது என்று நீதிமன்றத்திலே செந்தில் பாலாஜியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதானியுடைய செல் நிறுவனத்திலே முதலீடு செய்யப்பட்டதில் ரூ.20 ஆயிரம் கோடி யாருக்கு சொந்தமானது. அந்த பணம் எங்கிருந்து வந்தது. இதுபற்றி அமலாக்கத்துறை ஏன் விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை? பிரதமர் மோடி அமலாக்கத்துறையிடம் அதானி செல் விவகாரத்திலே நடவடிக்கை எடுக்க ஆணையிடுவாரா?.
கர்நாடகவிலே பாஜக முதலமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோரின் ஆட்சியிலே 40 சதவிகித கமிஷன் ஊழல் என குற்றாச்சாட்டு எழுந்தபோது, சட்டவிரோத பணம் பரிமாற்றம் என்று சொல்லி மோடியின் அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? இதற்கெல்லாம் காரணமாக உள்ளவர் மோடியை என்று, அவரை நாங்கள் ஏ1 என்று சொன்னால், பாஜக மாநில தலைவர் ஏற்றுக்கொள்வாரா?. எனவேதான், இன்றைக்கு அமலாக்கத்துறையை அவர்கள் அரசியல் பழிவாங்கல் கருவியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். 1000 கோடி ஊழல் என்று சொல்லுகிறார்கள். ரெய்டு நடந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? ஏதாவது ஆதராம் இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக மறுத்து இருக்கிறார். டெல்லி பாணியிலே இங்கு அரசியல் செய்து விடலாம் என பாஜக கனவு காண்கிறது. தமிழக மக்கள் விழிப்புடன் இருப்பவர்கள். பாஜகவின் எந்த பாச்சாவும் செல்லுபடியாகாது.

நம்முடைய பிள்ளைகளுக்குக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2 ஆயிரத்து 192 கோடியை, பாஜக அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக நமக்கு தர மறுத்து இருக்கிறது. இதுபோல 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ. 3 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு தர மறுத்து இருக்கிறது. இதையெல்லாம் கண்டித்து தமிழகத்தில் பாஜக கட்சி போராட தயாரா? ஆனால் போராட அவர்கள் தயாராக இல்லை. ஏன்னென்று சொன்னால் தமிழக மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ. 20 லட்சம் கேட்டு மாட்டிகொண்டார். இதுதான் அமலாக்கத்துறையின் லட்சணம். அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் உத்தமர் கிடையாது.
தொகுதி மறுவரை, மும்மொழி கொள்கை இவற்றையெல்லாம் முன்னெடுத்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே போராடுகிறார்கள், குரல் கொடுக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டு நாடாளுமன்றத் தொகுதிகளை குறைக்க வேண்டும், தொகுதிகளை குறைத்துவிட்டால், இவர்களின் குரல் வலு குறையும் என தப்புக் கணக்கு போடுகிறார்கள். எனவே தொகுதி மறுசீரமைப்பால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்களோ அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் சக்தியாக முதலமைச்சர் இருக்கிறார். இதனால்தான் பாஜகவிற்கு நமது முதலமைச்சர் மீது தனி கோபம்” எனப் பேசினார்.