
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 06ஆம் தேதி முதல் 08ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் இந்த ஊழல் விவகாரத்தைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் சென்னை எழும்பூர் மைதானத்தில் இருந்து பேரணியாகச் சென்று தாளமுத்து நடராஜன் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை இன்று (17.03.2025) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி பா.ஜ.க சார்பில் விண்ணப்பம் செய்திருந்தது. இருப்பினும் இந்த முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
அதே சமயம் கடலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வந்த பா.ஜ.க நிர்வாகிகளை அடுத்தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பல்வேறு இடங்களில் பா.ஜ.க நிர்வாகிகளை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்தனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும், தெலங்காமான மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் வீட்டில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு அவரை வீட்டுக்காவலில் வைத்தனர். அதே போன்று பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மாலை 6 மணி ஆகியும் மகளிரை விடுவிக்காதது எனக் கேட்டுக் காவல் துறையினருடன் சென்னை விருகம்பாக்கத்தில் தமிழிசை செளந்தரராஜன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எங்களை விடுவிக்க உத்தரவு தராதது யார்?. யார் அந்த சார் என்று கூறி பாஜகவினர் முழக்கம் எழுப்பினர். அதே சமயம் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் தொண்டர் ஒருவர் மயக்கமடைந்தார். உடனே அவரை மீட்டு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.