திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டேரி மலைச்சாலையில் ஒற்றை யானை கடந்த இரண்டு நாட்களாக சாலையில் சுற்றித்திரிந்தும் அங்குள்ள விவசாய நிலங்களில் உள்ள மாமரம் மற்றும் வாழை செடிகளை சேதப்படுத்தியுள்ளது. மேலும் ஆம்பூரில் இருந்து பனங்காட்டேரி செல்லும் மலைச்சாலையில் யானை வருவதைக் கண்டு வாகன ஓட்டிகள் சிலர் அச்சமடைந்து வாகனங்களை திருப்பி அவசர அவசரமாக திரும்பிச் சென்றுள்ளனர்.
சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் அருகில் நின்று செல்பி எடுத்தும் கூச்சலிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை யானையை ஆலங்காயம் மற்றும் ஜமுனாமுத்தூர் காப்புக்காடு பகுதிக்கு பட்டாசு வெடித்து விரட்டியுள்ளனர்.
மேலும் இந்த ஒற்றை யானையானது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் வனப்பகுதி அருகில் உள்ள விவசாய நிலத்தில் இரண்டு நாட்களாக முகாமிட்டு தேசிய நெடுஞ்சாலையிலும் விவசாய நிலங்களிலும் சுற்றித்திரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.