வேப்பூர் அருகே அரசு பேருந்து மோதியதில் 91 ஆடுகள் மற்றும் அதனை ஓட்டி வந்த ஒருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் எலவனாசூர்கோட்டையில் இருந்து மேய்ச்சலுக்காக 300 ஆடுகளை திருநெல்வேலி மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் வேப்பூர் நோக்கி ஓட்டி வந்துள்ளார். அவரது மகன் லட்சுமணன் (35) இருசக்கர வாகனத்தில் ஆட்டுப்பட்டி நட்டு வைக்கும் வலைகளை எடுத்துக்கொண்டு ஆடுகளையும் ஓட்டி வந்தார்.
சேப்பாக்கம் கோமுகி ஆற்றின் பாலம் அருகே ஆடுகளை ஓட்டி வந்து போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து, ஆடு ஓட்டி வந்த லட்சுமணன் மற்றும் ஆடுகளின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டி வந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 91 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன.
இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார், உயிரிழந்த லட்சுமணன் உடலையும், ஆடுகளையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து அரசு பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா? விபத்து எவ்வாறு ஏற்பட்டது எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளை, கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்த பின்பு, ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் அந்த செம்மறி ஆடுகள் அடக்கம் செய்யப்பட்டன. ஒரே இடத்தில் 91 ஆடுகள் மற்றும் ஆடு ஓட்டி வந்த நபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.