Skip to main content

தமிழ்நாடு முழுக்க மெகா மோசடியில் ஈடுபட்ட கும்பல்! டெல்லியில் வைத்து கைது செய்த அரியலூர் போலீஸ்! 

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Gang involved in mega scam all over Tamil Nadu! Ariyalur police arrested in Delhi

 

அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். கடந்த 2018ஆம் ஆண்டு இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அவர், “உங்களுக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு சாட்டிலைட் மூலம் எங்கள் கம்பெனி இடம் தேர்வு செய்துள்ளது. அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு எங்கள் கம்பெனி தயாராக உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு மாதம் தோறும் வாடகையாக லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். 

 

அவர் கூறியது உண்மை என நம்பிய ராஜேந்திரன் சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செல்போன் டவர் வைக்க எங்கள் கம்பெனிக்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர் அந்த நிறுவனம் சார்பாக பேசியவர்கள். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சுமார் இருபத்தி நான்கு லட்ச ரூபாய் பணத்தை ராஜேந்திரன், அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தி வந்துள்ளார். அதன்பிறகே அவர்கள் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 14.5.2021 அன்று ராஜேந்திரன் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் மோசடி நபர்கள் குறித்து புகார் கொடுத்துள்ளார்.

 

இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ஜாகிர் உசேன், சுரேஷ்பாபு, அரவிந்தசாமி ஆகிய ஐந்து பேர் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டது. 

 

இந்த தனிப்படை போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்மூலம் அந்த மோசடி கும்பல் டெல்லியில் இருந்து செயல்படுவதை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். அதன் பிறகு தனிப்படை டெல்லி புறப்பட்டுச் சென்றது. அங்கு பல்வேறு இடங்களில் தேடி கடும் சிரமத்திற்கு இடையே மோசடி நபர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். முதலில் மோசடிக் கும்பலுக்கு தலைவராக செயல்பட்ட எம்.எஸ்.சி. பட்டதாரி மருதுபாண்டியன் என்பவரை கைது செய்தனர். அதன் பிறகு அவரது கூட்டாளிகள் ராஜேஷ், முருகேசன், ராஜ்கிஷன் மூவரையும் கைது செய்து டெல்லியிலிருந்து அரியலூர் கொண்டுவந்தனர். 

 

அதன் பிறகு காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தனிப்படை போலீசார், மோசடி நபர்களை அரியலூர் குற்றவியல் நீதிபதி செந்தில்குமார் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர் படுத்தினர். நீதிபதி, அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 15 ஆண்டுகள் டெல்லியில் முகாமிட்டு அங்கிருந்தபடியே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று செல்போன் டவர் அமைப்பது, வங்கிகளில் லோன் பெற்றுத்தருவது, கல்விக்கடன் பெற்று தருவது என பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அப்பாவி விவசாயிகளிடம் கூறி அவர்களிடம் இருந்து பல லட்சம் பணத்தை பறித்துள்ளனர். 

 

இவர்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணம் ஒன்பது லட்சத்தை காவல்துறையினர் முடக்கி வைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து மூன்று லேப்டாப், 42 செல்போன்கள், 18 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், 19 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றையும் நீதிபதி முன்பு ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் மெகா மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கும்பலை அரியலூர் சைபர் கிரைம் போலீசார், டெல்லி சென்று கைது செய்து அரியலூர் கொண்டு வந்து சிறையில் அடைத்த செய்தி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்