ஆத்தூர் தொகுதி மக்கள் நலனுக்காக 34 வருடங்களாக அயராது உழைப்பவர் அமைச்சர் ஐ. பெரியசாமி என்று கன்னிவாடியில் நடைபெற்ற புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ.1584.17 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.5.90 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.5.90 கோடி மதிப்பில் புதிய நவீன பேருந்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி, வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கன்னிவாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சித்தையன்கோட்டை மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சிகளில் ரூ.53.55 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு பேசிய அமைச்சர் கே.என். நேரு, “தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் கன்னிவாடி பேரூராட்சியில் 5 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. தொகுதியின் அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி தமிழகம் முழுவதும் சென்றாலும் தனது தொகுதியான ஆத்தூர் தொகுதியின் மீது தனி பாசம் கொண்டவர். கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு அரசு கலைக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார்.
இப்போது புதிய பேருந்து நிலையத்தையும் கொண்டு வந்துள்ளார். 1989 ஆம் ஆண்டு முதல் 2023 இன்றுவரை 34 ஆண்டுகள் தொகுதி மாறாமல் ஒரே தொகுதியில் போட்டியிட்டு தொகுதியில் மக்களோடு மக்களாக வளம் வருபவர். உங்கள் எல்லோராலும் ஐ.பி. என அன்போடு அழைக்கப்படும் ஐ.பெரியசாமி. நான் கூட ஆரம்பத்தில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு இப்போது திருச்சி தொகுதியில் மாறியுள்ளேன். ஆனால் நீங்கள் அவர் மீது அதிக அளவு பாசத்துடன் இருப்பதால்தான் ஐ.பெரியசாமி தொடர்ந்து ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்” என்றார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் ஆண்களுக்கான மேல்நிலைப்பள்ளி இடமாக இருக்கட்டும், பெண்களுக்கான உயர்நிலைப்பள்ளி இடமாக இருக்கட்டும் தற்போது புதிய பேருந்து நிலையத்திற்கும் இடம் கொடுத்து உதவிய திருமலைசாமி ரெட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கன்னிவாடி பேரூராட்சியில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். தோணிமலைக்கு முதன்முதலாக தார்சாலை வசதி அமைத்து கொடுத்தது திமுக ஆட்சியில்தான். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாரி வழங்கும் வள்ளலாக கேட்டவுடன் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு 213 கோடி ஒதுக்கீடு செய்து விரிவான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளோம்.
திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இரண்டாண்டுக்குள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு 213 கோடி ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்கள் செயல்படுத்த உள்ளது. பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்களில் தனிநபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அது விரைவில் நிறைவேறப் போகிறது. இதுபோல ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்திற்கு தினசரி 35லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12 மாதங்களுக்குள் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகளுக்கும் குடிதண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.