தமிழகத்தில், வரும் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், புதிதாக பேருந்து பயண அட்டை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் சேகரிக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.
கரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24- ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு, படிப்படியாக பின்னர் தளர்த்தப்பட்டு வந்தாலும், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், வரும் ஜனவரி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
வழக்கமாக, அரசுப்பள்ளி மாணவர்களிடம் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே இலவச பேருந்து பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுவது நடைமுறை. நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் மூடப்பட்டதால் இதுவரை இலவச பயண அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறவில்லை.
இந்நிலையில், தற்போது அனைத்துப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும், மாணவர்களிடம் இருந்து இலவச பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பத்தை பெற்று, அந்தந்த மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகங்களில் டிசம்பர் மூன்றாம் வாரத்திற்குள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, இலவச பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.