ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும்; 18 மாதம் முதல் ஆறு வயது உடைய காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்; அதன் பின்னர் அதனை வீட்டில் வளர்ப்பார்கள்; வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் இங்கே கிடையாது; ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது; அதைத் துன்புறுத்தல் என்று கூற முடியாது; ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கு போட்டி இல்லை; ஜல்லிக்கட்டு போட்டிக்குப் பின்னால் காளைகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது’ எனத் தமிழக அரசு பல தரப்பட்ட வாதங்களை வைத்துள்ளது.
இதனிடையே தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.