கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர்கள் இல்லாமலே மறு உடற்கூராய்வை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் வாதிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம் மீண்டும் மறு பிரேதப் பரிசோதனை நடத்த அனுமதி அளித்து நேற்று இடைக்கால தீர்ப்பு வழங்கியது. மாணவியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது. அக்குழுவில் கீதாஞ்சலி (விழுப்புரம்), கோகுலநாதன்( சேலம்), ஜூலியான ஜெயந்தி (திருச்சி), ஓய்வுபெற்ற தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் இருக்கின்றனர்.மேலும் பெற்றோரும் அவர்கள் தரப்பு வழக்கறிஞருடன் மறு உடற்கூராய்வில் பங்கேற்கலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
எங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரும் மறு பிரேதப் பரிசோதனையில் இடம்பெற வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கை வைத்த நிலையில் அதனை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மாணவியின் தந்தை தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மறு பிரேதப் பரிசோதனையில் எங்கள் தரப்பு மருத்துவர் இடம்பெற வேண்டும்; அதுவரை உடற்கூராய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு நீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் நீங்கள் திடீரென மாற்றம் கொண்டுவர வேண்டும் என கோரினால் அதனை செய்ய முடியாது; வழக்கை நாளைக்கு தள்ளிவைக்கிறோம். உடற்கூராய்வை நிறுத்த முடியாது என தெரிவித்தது.
தற்பொழுது பிற்பகல் 1 மணிக்கு மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்ட நிலையில் பெற்றோர்கள் இல்லாமல் உடற்கூராய்வை நடத்தவும், பெற்றோர்கள் வந்தால் அனுமதிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.