வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் துணை மேயர் சுனில் மற்றும் ஆணையர் ஜானகி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் ஒன்றாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு பேசுகையில், “தெருவிளக்குகள் எரிவதில்லை. அது குறித்து பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கழிவுநீரும் குடிநீர் கலந்து வருகிறது. சாலைகள் சீர் செய்யப்படவில்லை. மொத்தத்தில் ஒரு பணி கூட நடக்கவில்லை” எனக் குற்றம்சாட்டி பேசினார்.
இதேபோன்று காட்பாடியைச் சேர்ந்த திமுக ஒன்றாவது மண்டலக் குழு தலைவர் புஷ்பலதா பேசுகையில், “மாநகராட்சி, மக்கள் பணிகளை சரிவர செய்வதில்லை. மக்கள் மாமன்ற உறுப்பினராகிய எங்களை சரமாரியாக கேள்வி கேட்கின்றனர். என்ன பதில் சொல்ல முடியும்? தெருவிளக்குகளும் எரிவதில்லை. சாலை வசதி குடிநீர் போன்ற வசதிகளுமில்லை. நான் இந்த குறைகளை மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறேன் இவற்றை சரி செய்யவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்” என்றார்.
திமுக மண்டலக் குழு தலைவரே மாமன்றக் கூட்டத்தில் இப்படி பேசியதால், மாமன்றத்தில் உள்ள மற்ற திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.