பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பாலை அடைத்து சட்டவிரோதமாக விற்பனை நடத்தியதாக வெளியான சம்பவம் சென்னை மாதவரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் தாய்ப்பால் விற்பனை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை மாவட்டத்தில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மாதவரம் பகுதியில் தாய்ப்பாலை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து சட்டவிரோதமாக ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தகவல் அடிப்படையில் தாய்ப்பால் விற்பனை மையங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
தாய்ப்பாலை விற்பது சட்டப்படி குற்றம் என்பதால் வேறு சத்துணவு பொருட்களை விற்பனை செய்ய அனுமதிகோரி அனுமதி வாங்கிவிட்டு அதற்கான லைசென்ஸை வைத்து சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனையில் ஈடுபடுவது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ள 18 குழுக்கள் அமைக்கப்பட்டது.தாய்ப்பால் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் மக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கத்தில் உள்ள ஆர்.கே மருந்து கடையில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் வந்த அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சோதனையில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. 50 மில்லி கிராம் அளவுள்ள தாய்ப்பாலின் விலை 500 ரூபாய் என விற்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் பவுடர் வடிவில் தாய்ப்பாலை குளிர்ச்சியாக்கி விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. தாய்ப்பால் பவுடரை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவை 'கிங்க் இன்ஸ்டியூட்' ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.