கரோனா வைரஸில் இருந்து ஈரோடு மாவட்டம் தற்போது மீண்டெழுந்து நம்பிக்கையோடு நடைபோட தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒரு பெண் உள்பட 10 பேர் குணமடைந்ததையடுத்து இன்று அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தது ஈரோடு மாவட்ட நிர்வாகம். மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், பொது சுகாதார துறை மாவட்ட இணை இயக்குநர் சவுண்டம்மாள் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் குணமடைந்தவர்களுக்கு பழங்கள், பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்கள், உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக குணமடைந்தவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள் முன்பாக ஒரு சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், "ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 32 பேர் குணமடைந்துள்ளனர். ஏற்கனவே முதலில் 13 பேரும், அடுத்து 9 பேரும் என 22 பேர் சிகிச்சை முடித்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இன்று 10 பேர் வீட்டிற்கு செல்கிறார்கள். தற்போது மருத்துவமனையில் இன்னும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். கரோனா வைரஸ் தொற்று புதிதாக யாருக்கும் ஏற்படாமல் கட்டுக்குள் உள்ளது. இந்த 32 பேரும் விரைவில் சிகிச்சை முடித்து வீடுகளுக்கு திரும்புவார்கள்." என்றார்.
கரோனா தாக்கம் அதிகம் இருந்த நகரங்களில் ஒன்றான ஈரோடு, தற்போது பாதுகாப்பான மாவட்டமாக உருவாகி வருகிறது. அதற்கு காரணம் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள், மருத்துவர்கள் முதல் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என கீழ்நிலை ஊழியர்கள் வரை செய்துவரும் அயராத உழைப்புதான் என்பதே உண்மை. அதேபோல் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளும் அதற்கான நாட்களை முடித்து, வீதிகளில் போடப்பட்ட தடுப்புகளும் மெல்ல, மெல்ல அகற்றப்பட்டு வருகிறது. மொத்தத்தில் ஈரோடு இயல்பு நிலைக்கு திரும்புகிறது.