கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரிய நெசலூர் பகுதியில் தேர்தல் அதிகாரி செல்வமணி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டெம்போ டிராவலரை மறித்து சோதனை செய்தனர். அதில் ரூ. 27 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதை அறிந்த தேர்தல் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, விருத்தாசலம் சார் ஆட்சியர், பிரசாந்திடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட ரூ. 27 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் குறித்து விசாரணை செய்தபோது, விருத்தாசலத்தில் ஸ்ரீ குமரன் தங்க நகைக் கடையின் புதிய கிளை வருகின்ற 10-ம் தேதி திறக்கப்படவுள்ளது. அதற்காக அந்நிறுவன ஊழியர்கள் மூலம் கோயமுத்தூரிலிருந்து டெம்போ டிராவலரில் ரூ. 27 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்துவந்தது தெரியவந்தது.
இருந்தாலும் உரிய ஆவணம் சமர்பிக்க கோரியதின் பேரில், அந்நிறுவன ஊழியர்கள் ஆவணங்களுடன் சார் ஆட்சியர் பிரசாந்தை சந்தித்தனர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால் நகை மற்றும் வாகனத்தை அந்நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.