திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 21 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அதிமுக 8 இடங்களிலும், திமுக 9 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர். அதிமுகவிடன் பாமக பலம் சேர்ந்ததால் 11 கவுன்சிலர்களோடு அவை முன்னணியில் இருந்தன. திமுக 10 வாக்குகளோடு அடுத்த இடத்தில் இருந்தன.
அதிமுகவில் ஒன்றிய குழு தலைவர் யார் என்பதில் குழப்பம் வந்தது. கலசப்பாக்கம் என்பது அதிமுகவின் பலம் பொருந்திய பகுதி என்கிற பெயருடன் இருந்து வந்தது. அதற்கு காரணம் அந்த தொகுதியின் அதிமுக பிரமுகரான முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி. தற்போதைய எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளருக்கு தான் சேர்மன் பதவி தரவேண்டும் என முட்டி மோதினர். இறுதியில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாதிமங்களம் துரை என்பவரின் மனைவி கலையரசியை சேர்மன் வேட்பாளராக நிறுத்தினார்கள்.
திமுகவில் கலசப்பாக்கம் தொகுதி பொறுப்பாளரான மருத்துவர் கம்பன்வேலு சிபாரிசில், கவுன்சிலர் அன்பரசி என்பவரை நிறுத்தினார்கள். இதில் ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த அன்பரசி வெற்றி பெற்றார். இது அதிமுக தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நம்மிடம் 11 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் 10 கவுன்சிலர்களை மட்டுமே வைத்துள்ள திமுக எப்படி சேர்மன் பதவியை பிடித்தது என அதிர்ச்சியாகி அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இது மறைமுக தேர்தல் என்பதால் யார், யாருக்கு வாக்களித்தார்கள் என கண்டறிய முடியாது, தேர்தல் முடிந்துவிட்டது, சேர்மன் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் எனச்சொல்லிவிட்டனர்.
இந்த பதிலில் சமாதானமடையாத அதிமுகவினர் மற்றும் கவுன்சிலர்கள் திருவண்ணாமலை டூ வேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டனர்.
சேர்மன் தேர்வு என்பது முடிந்துவிட்டது என அதிகாரிகள் கூறியதால் தங்களில் யார் ஓட்டு மாற்றிப்போட்டது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் ஆளும் கட்சியான அதிமுகவினர். அதேநேரத்தில் மாலை நடைபெறவிருந்த துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக கலந்துக்கொள்ளாமல் பிரச்சனை செய்ய தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு கலசப்பாக்கம் ஒன்றியத்தில் திமுகவை சேர்ந்தவர் சேர்மனாக பதவியேற்று இருப்பது திமுக தொண்டர்களை கொண்டாட வைத்துள்ளது. முதல்வருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சரும், மாவட்ட பால் கூட்டுறவு சங்க தலைவருமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, தொகுதி எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் தொகுதிக்குள், அதிமுகவுக்கு பலமிருந்த நிலையில், அதை உடைத்து திமுக வெற்றி பெற வைத்த தொகுதி பொறுப்பாளரான கம்பனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.