தமிழ்நாடு கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குக் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. அதே போன்று இலங்கையில் இருந்து அதே கடல் வழியாக தங்கம் கடத்தல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் கஞ்சா கடத்தல்காரர்களை அடிக்கடி போலீசார் பிடித்து வந்தாலும் நாளுக்கு நாள் கடத்தல்களும் குறைவில்லாமல் தொடர்கிறது. இந்நிலையில் நேற்று (10.01.2025) ஆந்திராவில் இருந்து சென்னை வழியாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் மீன் பார்சல் ஏற்றும் கன்டெய்னர் லாரியில் கஞ்சா பண்டல்கள் கடத்தி வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அதன்படி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் உதயசந்திரன் தலைமையிலான போலீசார் கண்காணித்து வந்தனர். புதுக்கோட்டை கிழக்கு கடற்கரை கிராமமான கோட்டைப்பட்டினம் அருகே கோட்டைப்பட்டினம் போலீசார் மூலம் குறிப்பிட்ட கன்டெய்னரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மீன் பார்சல் பெட்டிகளில் 320 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் காரைக்காலைச் சேர்ந்த சிலம்பரசன், பிரகாஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அதோடு கஞ்சா பணடல்கள், கன்டெய்னரையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டல்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி பகுதியில் இறக்கி அங்கிருந்து இலங்கைக்குக் கடத்த இருந்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக ஜெகதாப்பட்டினம், மீமிசல், ராமநாதபுரம் நம்புதாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்கின்றனர் போலீசார்.